சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய விமர்சனங்களுக்கு கடும் பதிலளித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தமில்லை; அரசியல் ஞானம் இல்லாமல் பேசுகிறார்” எனக் கண்டித்தார்.

மேலும், அரசுப் பள்ளிகள், அரசுக்கு உட்பட்ட கோயில் நிர்வாகங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு பலவிதமான நலத்திட்டங்களை வழங்கி வருவதாக கூறிய அவர், “மாணவர்கள் தங்கும் விடுதி, காலை சிற்றுண்டி, இப்போது மதிய உணவு, புத்தகப்பைகள், தண்ணீர் பாட்டில் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதையெல்லாம் தெரிந்தும் பேசாத பழனிச்சாமி, ‘பூனை கண்ணை மூடிகிட்டு பூலோகம் இருண்டுருச்சு’னு நினைக்கிற மாதிரி” என்று விமர்சித்தார்.

அதேபோல், “உங்கள் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆரும், அதிமுக முன்னாள் தலைவி ஜெயலலிதா அவர்களும் அதே பள்ளியில், கல்லூரிகள் தொடங்கினர். அப்போது நீங்கள் பேசவில்லை; இப்போது பேசுவது  வாயை கொடுத்து மாட்டிக்கொள்வதற்கே” என்றார்.வரும்  2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி என்பவரின் பெயரே தமிழ்நாட்டில் மறைந்து விடும் என்றும் அவர் கடுமையாக தெரிவித்தார்.

அரசு எடுத்துவரும் கல்விச் சலுகைகள், கோயில் நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் சேவைகள் அனைத்தும் மாணவர்களுக்கே பயன்படுவதாகவும், இதை மறந்துவிட்டு பழனிச்சாமி பேசியது சிந்தனையில்லாத அரசியல் எனவும் அமைச்சர் சேகர் பாபு ஆவேசமாக சாடியுள்ளார்.