
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே அஞ்சாலும் மூடு பகுதியில் வசித்து வருபவர் அனிலா ரவீந்திரன் (34). இவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர். இவர் மீது ஏற்கனவே ஏராளமான போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜாமினில் இருந்து வெளியே வந்த அனிலா கர்நாடகாவில் இருந்து போதைப் பொருளை காரில் கடத்தி வருவதாக கொல்லம் காவல்துறை கமிஷனர் கிரண் நாராயணனுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பெயரில் கொல்லம் துணை கமிஷனர் ஷெரிப் தலைமையில் 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொல்லம் நீண்டகரை அருகே அனிலா ரவிச்சந்திரனின் கார் நிற்பது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிய வந்தது. அதன்படி காவல்துறையினர் அனிலா ரவிச்சந்திரன் கார் இருக்கும் பகுதிக்கு சென்றனர். ஆனால் காவல்துறை வருவதை கவனித்த அனிலா காருடன் அங்கிருந்து வேகமாக தப்பிச்செல்ல முயன்றார் இருப்பினும் காவல்துறையினர் விடாமல் காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
அதன் பின் காரில் இருந்த அனிலாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் காரில் நடத்திய சோதனையில் 50 கிராம் எம்டிஎம்ஏ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னர் அனிலா ரவிச்சந்திரன் கொல்லம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உள்ளாடைக்குள் 41 கிராம் போதை பொருள் மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்தனர் அதனை கைப்பற்றிய காவல் துறையினர் அனிலாவை கொல்லம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் கடத்தி வந்த போதை பொருள்களின் மதிப்பு ரூபாய் 3 லட்சம் வரை இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.