முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளுக்குத் தான் 100 சதவீதம் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தெரிவித்துள்ளார். கேரள சட்டப்பேரவை சார்பில் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் 4-வது சர்வதேச புத்தகத் திருவிழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், தான் நேருவின் தீவிர ரசிகனாக இருந்தாலும், அவரது குறைகளைச் சுட்டிக்காட்டத் தயங்க மாட்டேன் என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக, 1962-ஆம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போரில் இந்தியா சந்தித்த தோல்விக்கு நேரு எடுத்த சில தவறான முடிவுகளே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அவரது அனைத்துக் கொள்கைகளையும் கண்மூடித்தனமாக ஆதரிக்க முடியாது என்றும் அவர் வெளிப்படையாகப் பேசினார்.

அதே சமயம், நாட்டின் தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நேருவை மட்டுமே குறைகூறி வரும் பாஜகவின் போக்கையும் சசிதரூர் கடுமையாகச் சாடினார். நேருவை ஒரு வசதியான பலிகடாவாக பாஜக மாற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தான் சொல்ல மாட்டேன்.

ஆனால் அவர்கள் நிச்சயமாக நேருவின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் என்று சுட்டிக்காட்டினார். நேருவின் சில தவறுகளை விமர்சிப்பதில் நியாயம் இருக்கலாம், ஆனால் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு வலுவான அடித்தளமிட்டவர் நேருதான் என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.