கோவை மாவட்டம் வடவள்ளி அருகே பி.என் புதூர் பகுதியில் ஸ்ரீவித்யா (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 மாதங்களாக அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். இவருக்கு பைரவன் என்ற கணவரும் அசந்தியா (4) என்ற மகனும் ப்ரக்ரருதி (10 மாதம்) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மூத்த மகன் பிறந்த போதே தாய்ப்பால் தானம் குறித்த திட்டத்தை அறிந்திருந்த போதிலும் தன்னால் தாய்ப்பால் தானம் செய்ய முடியாததால் தற்போது இளைய மகள் பிறந்த நிலையில் தாய்ப்பால் தானம் செய்து வருகிறேன். இந்த தாய்ப்பாலை அதற்குரிய பாக்கெட்டுகளில் உரிய முறையில் சேமித்து அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெற்று பயன்பெறும் வகையில் அனுப்பி வைப்பதாக ஸ்ரீவித்யா தெரிவித்துள்ளார்.

இவர் திருப்பூரைச் சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்திவரும் பவுண்டேஷன் மூலமாக தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். இவர் அவருடைய மகள் பிறந்து 5 நாட்களில் இருந்து தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். தற்போது ஸ்ரீவித்யா 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார். அதன் பிறகு 10 மாதங்களில் 135 லிட்டர் வரை தாய்ப்பால் தானம் செய்துள்ளார். குழந்தைக்கு போக மீதமுள்ள தாய்ப்பாலை அதற்குறிய  பிரத்தியேக பாக்கெட்டில் சேகரித்து பவுண்டேஷன் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக ஸ்ரீவித்யா கூறியுள்ளார். மேலும் தாய்ப்பால் தானம் செய்வதற்காக ஸ்ரீவித்யா இந்தியன் புக் அண்ட் ஆசியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.