ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த சௌத்ரி சமூகப் பஞ்சாயத்து, பெண்கள் மற்றும் இளம்பெண்கள் கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தக் அதிரடித் தடை விதித்துள்ளது.

வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவின்படி, பெண்கள் சாதாரண கீ-பேட் (Keypad) போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், திருமண நிகழ்ச்சிகள், பொது விழாக்கள் அல்லது அண்டை வீடுகளுக்குச் செல்லும் போது கூட மொபைல் போன்களை எடுத்துச் செல்லக் கூடாது எனப் பஞ்சாயத்து கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்த வினோதமான முடிவுக்குப் பஞ்சாயத்து ஒரு விசித்திரமான காரணத்தைக் கூறியுள்ளது. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால், வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் அதிக நேரம் மொபைலில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்றும், இதனால் அவர்களின் கண் பார்வை மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் பஞ்சாயத்துத் தலைவர் சுஜனாராம் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

எனினும், கல்வி கற்கும் மாணவிகள் மட்டும் படிப்பு தேவைக்காக வீட்டின் உள்ளே ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவாக இது கூறப்பட்டாலும், பெண்களின் சுதந்திரத்தை இது பறிப்பதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.