மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜிநகரைச் சேர்ந்த ஒரு தந்தை, தனது 6 வயது மகன் சுமக்கும் பள்ளிப் பையின் பாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள ஆதங்கம், தற்போது நாடு முழுவதும் உள்ள பெற்றோர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலு கோரடே என்பவர் தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில், முதலாம் வகுப்பு படிக்கும் தனது மகனின் பள்ளிப் பையை எடை மெஷினில் வைத்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், 21 கிலோ எடையுள்ள சிறுவன், சுமார் 4.5 கிலோ எடையுள்ள பள்ளிப் பையைச் (உணவுப் பெட்டியுடன் சேர்த்து) சுமப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விதிமுறைகளின்படி, ஒரு குழந்தையின் பள்ளிப் பை அதன் உடல் எடையில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும். ஆனால், இந்தச் சிறுவன் தனது எடையில் 20 சதவீதத்திற்கும் மேலான பாரத்தைச் சுமக்கிறான். இது குறித்துப் பள்ளியிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், மற்ற பெற்றோர்களிடமும் தங்களது குழந்தைகளின் பள்ளிப் பையின் எடையைச் சரிபார்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “குழந்தைகளின் முதுகில் பாரத்தை ஏற்றுவது ஒழுக்கம் அல்ல, அது தவறான கல்வி முறை” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.