அமெரிக்காவின் வாஷிங்டனில் கடந்த ஜனவரி 6-ம் தேதி நள்ளிரவு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் காலாவதியான ஒரு காரை நிறுத்தச் சொன்னபோது, அந்த டிரைவர் காரை மின்னல் வேகத்தில் ஓட்டித் தப்பினார். போலீஸார் விடாமல் துரத்த, ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது.

அந்த மோதலின் வேகத்தில், காரின் முன் கண்ணாடியைப் பிய்த்துக்கொண்டு உள்ளே இருந்த ஒரு பெரிய நாய் அப்படியே வெளியே தூக்கி வீசப்பட்டது. இதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஆனால், அந்த நாய் ஜாக்கி சான் பட பாணியில் நான்கு கால்களிலும் அழகாகத் தரை இறங்கி, பயத்தில் அருகில் இருந்த தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. பின்னர் சோதனையிட்டதில், காருக்குள் இருந்த மற்றொரு சிறிய நாயும் உயிர் தப்பியது உறுதியானது.

காரை ஓட்டிய 39 வயது நபரிடம் போதைப்பொருள் இருந்ததும், அவர் போதையில் கார் ஓட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது விலங்குகள் மீதான வன்கொடுமை உட்படப் பல பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாய்களின் வீடியோ இப்போது இணையத்தில் ‘ஷாக்’ ரகமாக வைரலாகி வருகிறது.