அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பெலுகுரி முண்டா கிராமத்தில் தான் இந்த மனசாட்சியற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த கார்டி பிருவா (43) மற்றும் அவரது மனைவி மிரா பிருவா (33) ஆகியோர் மீது, அவர்கள் மாந்திரீகம் செய்வதாகக் கிராம மக்களுக்கு நீண்ட நாட்களாகச் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இந்த ஆத்திரத்தில், நேற்று இரவு ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்று திரண்டு அந்தத் தம்பதியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டனர்.
ஆக்ரோஷமடைந்த கும்பல் முதலில் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கியது. பின்னர், கணவன் – மனைவி இருவரையும் தரதரவென வீட்டு வாசலுக்கு இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவர்கள் நிலைகுலைந்து விழுந்ததும், கொடூரமான முறையில் அவர்கள் மீது தீயை வைத்து உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர்.
தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்குள், அந்தத் தம்பதியின் உடல்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டன.
அங்கிருந்த தடயங்களைச் சேகரித்துள்ள போலீஸார், இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, கொலையில் ஈடுபட்ட கிராமத்தினரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 21-ஆம் நூற்றாண்டிலும் இத்தகைய மூடநம்பிக்கையால் இரு உயிர்கள் பறிபோயிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
