தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு மற்றும்‌ 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில் தமிழகத்தில் விளையும் விளை பொருள்களை தான் பொங்கல் பரிசு தொகுப்பாக பொது மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது பொங்கல் பரிசு தொகுப்பை வங்கி கணக்கில் செலுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் பொங்கல் பண்டிகைக்கு குறுகிய காலமே இருப்பதால் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவது சாத்தியமாகுமா?. அதன்பிறகு ஒரு சில வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்று கூறி சில பொங்கல் பரிசாக செலுத்தப்படும் பணத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அதோடு மூன்று வகையான ரேஷன் கார்டுகள் இருப்பதால் அவற்றை பிரிப்பதிலும் சிக்கல் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் மின் இணைப்போடு ஆதார் எண் இணைப்பை செய்வது போன்று இந்த பணியையும் செய்யலாமே என்று கூறினர். மேலும் பொங்கல் பரிசு பணத்தை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா என்பதற்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறி வழக்கு விசாரணை ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.