சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நலம் 365 எனும் youtube சேனல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த youtube சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.‌ இந்த youtube சேனல்சமூக வலைதளங்களில் சிலர் போலியான தகவல்களை பரப்புவதால், அதை தடுக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளதோடு மருத்துவம் தொடர்பான பல்வேறு விதமான செய்திகள் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் 2347 பேர் எம்ஆர்பி தேர்வாணையம் மூலம் விண்ணப்பித்த நிலையில், இதில் 2323 பேர் பணியில் சேர்ந்து விட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு 5736 பேர் எம்ஆர்பி மூலம் விண்ணப்பித்த நிலையில், 2366 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இந்த பணி நியமனம் அதிமுக அரசால் கொரோனா பரவலை காரணம் காட்டி சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமல் விகிதாச்சார அடிப்படையில் நடைபெற்றுள்ளது. பேரிடர் காலத்தில் விதிமுறைகளை மீறி பணிக்கு வந்தவர்களை பணியில் சேர்க்க வேண்டாம் என்று நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் அவர்களை பணியிலிருந்து நீக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை.

ஆனால் நீதிமன்ற உத்தரவால் 4 மாதத்திற்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பணி நீட்டிப்பு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 2200 செவிலியர் பணியிடங்கள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் காலியாக உள்ள 270 இடைநிலை சுகாதார செவிலியர்கள் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

இந்த பணி நியமனம் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் கீழ் நடைபெறும் நிலையில், கோவிட் காலத்தின் போது செவிலியர்களுக்கு 14,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது மாற்று பணியிடம் காரணமாக 18000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். ஆனால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது. இதை ஒப்பந்த செவிலியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் மற்ற அரசியல் கட்சிகள் அக்கறையின் காரணமாக, கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் என்று கூறினார்.