தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முள்ளிக்காடு பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ராமர் என்பவரும் அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டி கடந்த 20 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன், அவரது மனைவி அற்புதம் ஆகியோர் அது தங்களுக்கு சொந்தமான நிலம் எனவும், அதற்கு பணம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சுப்பிரமணி, முருகேசன் உள்பட இருதரப்பைச் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.