ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் போரில் அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை அடுத்து ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போர் சூழலில் அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளிலிருந்து நேரடித் தாக்குதல் இல்லாத வரை அந்த நாடுகளை ஈரான் இலக்காகக் கொள்ளாது என அவர் உறுதியளித்துள்ளார். இந்த முடிவிற்கு ஈரானின் இடைக்காலத் தலைமை கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள போதிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் மண்டியிடாது என்றும் எதிரிகளின் எண்ணம் நிறைவேறாது என்றும் அவர் அரசு தொலைக்காட்சியில் ஆவேசமாக உரையாற்றினார்.

இதனிடையே ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன. இன்றைய ஏவுகணைத் தாக்குதலில் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையம் தீப்பற்றி பெரும் சேதமடைந்த நிலையில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாகத் தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அதிபரின் அறிவிப்பால் அண்டை நாடுகள் மீதான தாக்குதல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வல்லரசு நாடுகளின் நேரடித் தாக்குதலால் ஈரானில் போர் பதற்றம் தணியாமல் நீடிக்கிறது.