ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதியது. மே 28, ஞாயிற்றுக்கிழமை மழை காரணமாக, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த இந்த ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ரிசர்வ் தினத்தன்று (29ஆம் தேதி) நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எதிரொலி குஜராத் மண்ணைக் கவ்வியுள்ளது.

அகமதாபாத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங் தேர்வு செய்தார்.. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் விருத்திமான் சாஹா ஆகியோரின் அரைசதத்தால் சென்னைக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சுதர்சன் 47 பந்துகளில் 8 பவுண்டரி,  6 சிக்சர் உட்பட 96 ரன்கள் எடுத்தார். மேலும் சாஹா 54 ரன்களும், கில் 39 ரன்களும், ஹர்திக் பாண்டியா 21 ரன்களும் எடுத்தனர்.

பின் சென்னை அணியின் துவக்க வீரர்களாக டேவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் களமிறங்கினர். முகமது ஷமியின் முதல் ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடித்தார் ருதுராஜ். அப்போது மழை மீண்டும் குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டது. சென்னை அணி பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்தது..  மழையின் காரணமாக ஆட்டம் தாமதமானது. இதையடுத்து   5 ஓவர்கள் குறைக்கப்பட்டு டக் வொர்த் லூயிஸ் முறைப்படி சென்னை அணிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து போட்டி மீண்டும் இன்று அதிகாலை 12:10 மணிக்கு தொடங்கியது. ருதுராஜ் மற்றும் கான்வே அதிரடி தொடக்கம் கொடுத்தனர். பின் நூர் அகமது வீசிய 7வது ஓவரின் 3வது பந்தில் ருதுராஜ் 26 (16) ரன்களிலும், கான்வே 47 (25) ரன்களிலும் அவுட் ஆகினர். சிஎஸ்கே 7 ஓவரில் 78/2 ரன்கள்  எடுத்திருந்தது.. பின் ரஹானே மற்றும் ஷிவம் துபே களத்தில் இருந்தனர். ரஹானே லிட்டில் வீசிய 8வது ஓவரில் 2 சிக்ஸர் அடித்து மிரட்டினார்.. ஓவருக்கு 11 ரன்கள் என ரன்ரேட் சென்றது.. பின் ரஹானே 27 (13) ரன்களில் அவுட்டானார். சிஎஸ்கே வெற்றிக்கு 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்டது. பின் ராயுடு உள்ளே வந்தார். பவுண்டரி அடிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த துபே ரஷீத் கானின் 12வது ஓவரின் கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர் பறக்க விட, 15 ரன்கள் கிடைத்தது.

கடைசி 3 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மோஹித் சர்மாவின் 13வது ஓவரில் ராயுடு 6,4,6 என அடித்து மிரட்டிய நிலையில் 4வது பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ராயுடு இந்த போட்டியோடு ஓய்வு பெரும் நிலையில் 8 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அணிக்கு முக்கிய கட்டத்தில் உதவினார். பின் உள்ளே வந்த தல தோனி யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஆப் சைடு திசையில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.

இருப்பினும் அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. பின்னர் ஜடேஜா உள்ளே வந்தார். கடைசி 2 ஓவரில் சென்னை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. ஷமியின் இந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட வரவில்லை, ஆனாலும் துபேவும், ஜடேஜாவும் ஓடி 8 ரன்கள் சேர்ந்தனர். பின் பரபரப்பான கடைசி ஓவரில் 13 ரன்கள் சென்னைக்கு தேவைப்பட மோஹித் சர்மா அந்த ஓவரை வீசினார்.

துபே ஸ்ட்ரைக்கில் நிற்க, முதல் பந்து டாட் பாலாக, அடுத்த 3 பந்தில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் சென்னை ரசிகர்கள் சற்று சோகமடைந்தனர். கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட, ஜடேஜா ஸ்ட்ரைக்கில் நிற்க சென்னை ரசிகர்கள் இதயத்துடிப்பு பட படவென அடிக்க பதற்றமும் இருந்தது. ஆனால் ஜடேஜா 5வது பந்தை ஸ்ட்ரேட்டாக சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தை லெக் சைடு வீச, பதட்டமில்லாமல் ஜடேஜா லெக் சைடு பேட்டை வீச அது பின்னால் பவுண்டரிக்கு சென்றது. சென்னை அணி 15 ஓவரில் 5 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஷிவம் துபே, அம்பதி ராயுடு மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் முக்கியமான இன்னிங்ஸ் ஆடினர். கடைசி 2 பந்துகளில் குஜராத்தின் கையில் இருந்து வெற்றியை பறித்த ரவீந்திர ஜடேஜா தான் உண்மையான வெற்றியின் ராஜா. கேப்டன் கூல் தோனி தலைமையிலான சிஎஸ்கே 5வது முறை கோப்பையை வென்றுள்ளது. துபே 32 (21) ரன்களுடனும், ஜடேஜா 15 (6) ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.