ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது மைதானத்திற்கு வெளியேயும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆர்சிபி – ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியின் போது, விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட்டை பந்துவீச வருமாறு கோலி கிண்டலாகச் சைகை காட்டியுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக விராட் கோலி 15 ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.

அப்போது டிராவிஸ் ஹெட், கோலியைப் பார்த்து, “நண்பா, நான் பந்துவீசுவதற்கு முன்பாகவே நீ அவுட் ஆகிவிட்டாயே” என்று வேடிக்கையாகக் கூறியுள்ளார். இந்த உரையாடலின் போது இருவருக்குள்ளும் லேசான வாக்குவாதம் ஏற்பட்டு, மைதானத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் முறைப்படி கைகுலுக்கிக் கொள்ள மைதானத்திற்கு வந்தனர். அப்போது டிராவிஸ் ஹெட், விராட் கோலிக்கு கைகுலுக்க கையை நீட்டியுள்ளார். ஆனால், விராட் கோலி அவரது முகத்தைக் கூட பார்க்காமல், கைகுலுக்க மறுத்து அப்படியே கடந்து சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, கோலியின் தீவிர ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் டிராவிஸ் ஹெட் மற்றும் அவரது மனைவி ஜெசிகா ஹெட் ஆகியோரை மிகக் கொடூரமாக டிரோல் ( செய்யத் தொடங்கினர். ஜெசிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அநாகரிகமான கமெண்ட்களும், மெசேஜ்களும் குவிந்தன. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் பேசிய ஜெசிகா ஹெட், “எனக்கு மட்டுமல்லாமல், எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கூட அநாகரிகமான மெசேஜ்கள் வருகின்றன. இது எனக்கு 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு நடந்த கொடூரமான டிரோலிங்கை நினைவூட்டுகிறது. விளையாட்டு வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தயவுசெய்து மதியுங்கள்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.