அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள பிரபலமான ‘Invisible House’ என்று அழைக்கப்படும் கண்ணுக்கு தெரியாத பீச்சு வீடு, ஒரு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சருக்கு சிக்கலாக மாறியுள்ளது. சேன் டேவிஸ் என்ற சமூக வலைதள பிரபலம், இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தினசரி வாடகை வீட்டில் தங்கிய போது, ஒரு செல்ஃபி எடுத்ததற்காக ரூ.8.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடு, வெளிப்படையான கண்ணாடி சுவர்களால் சூழப்பட்டு,  பாலைவனத்தில் ஒட்டுமொத்தமாக ஒன்றியிருக்கிறது. ஆனால், இங்கு முன் அனுமதியின்றி எடுக்கப்படும் புகைப்படங்கள், குறிப்பாக வணிக நோக்கத்திற்காக பதிவிடப்படும் பதிவுகள், கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டவை. இதுகுறித்து டேவிஸ் கூறியதாவது, “எங்களுடைய நண்பரின் காதலி குளியலறையில் எடுத்த ஒரு செல்ஃபியை இன்ஸ்டாகிராமில்  போட்டார். ஆனால் அதையும் பிரச்சினையாக எண்ணி அபராதம் வசூலிக்க முயன்றனர்,” எனக் கூறினார்.

மேலும், இந்த வீட்டிற்குள் சென்றவர்களால் வெளியே பார்வையிட முடியாது என்றாலும், வெளியிலிருந்து உள்ளே பார்ப்பதற்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இரவு நேரங்களில் தனியுரிமை இல்லாமல் இருப்பது போன்ற அனுபவம் ஏற்பட்டதாக டேவிஸ் புகார் தெரிவித்துள்ளார்.

“இந்த வீடு வெளியிலிருந்து நிதானமாகவும், விலை உயர்ந்த விடுதி போல தோன்றினாலும், உள்ளே தூங்கவே முடியாத அளவுக்கு இருந்தது” என்றும் அவர் கூறினார். வீடு நிர்வாகம், “சொந்த பயன்பாட்டுக்கே” என்ற பெயரில் பதிவிடப்பட்ட புகைப்படங்களும் வணிகத்திற்கு என்றே கருதப்படும் என்ற விதிமுறையை முன்வைத்து, அந்த செல்ஃபியை ஒரு “பிரமோஷனல்” பதிவாக பார்த்திருக்கிறார்கள்.