பாஸ்மதி அல்லாத அரிசி பையை வாங்குவதற்காக அமெரிக்காவாழ்  இந்தியர்கள் வரிசை கட்டி நிற்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் பல்வேறு உணவு பழக்கவழக்கங்கள் இருந்தாலும் அனைத்து நாடுகளிலும் பொதுவாக உண்ணப்படும் உணவாக அரிசி காணப்படுகிறது. இப்படி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய உணவாக அரிசி இருந்தாலும், அது எல்லா இடங்களிலும் விளைவதில்லை. உலகம் முழுவதிலுமிருந்து அரிசி ஏற்றுமதியில் இந்திய நாடு 40 சதவிகிதம் பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்தியா விதித்த நிலையில், அமெரிக்காவில் அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதிக்கான தடையை  கேள்விப்பட்ட அமெரிக்காவாழ் இந்தியர்கள் பலர் மூட்டை மூட்டையாக பாஸ்மதி அல்லாத அரிசி பையை வாங்க மும்மரம் காட்டி வந்தததை தொடர்ந்து, 

தற்போது அமெரிக்காவின் பல பகுதிகளில் ஒரு குடும்பத்திற்கு  ஒரு பாஸ்மதி அல்லாத அரிசிப்பை மட்டுமே வழங்கப்படும் என  பல இடங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சூப்பர் மார்க்கெட்டுகளில் பாஸ்மதி அல்லாத அரிசி பையை வாங்குவதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும்  வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.