இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த 2வது டி20 போட்டியில்  தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி, தொடரை வெல்லும் வாய்ப்பையும் இழந்தது.

இங்கிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் கைப்பற்றியது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்கை இங்கிலாந்து அணி 11.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து எட்டியது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களில் அலிஸ் கேப்சி (25; 21 பந்துகளில் 4 பவுண்டரி), நாட் ஸ்கிவர்-ப்ரன்ட் (16; 13 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர்) சிறப்பாக செயல்பட்டனர். இந்திய பந்துவீச்சாளர்களில் ரேணுகா சிங், திப்திசர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாய்கா இஷாக், பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

முன்னதாக முதலில் பேட் செய்த இந்தியா 16.2 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (30; 33 பந்துகளில் 2 பவுண்டரி) சிறப்பாக ஆட, ஸ்மிருதி மந்தனா (10) இரட்டை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். மேலும் துவக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா (0), ஹர்மன்பிரீத் கவுர் (9), தீப்தி சர்மா (0), ரிச்சா கோஷ் (4), பூஜா வஸ்த்ரகர் (6) என அனைவருமே ஏமாற்றமளித்தனர்.

டாஸ் இழந்து பேட்டிங் ஆடிய இந்தியா தொடக்கமே திணறியது. முதல் ஓவரின் 2வது பந்தில் தொடக்க வீராங்கனை  ஷஃபாலி வர்மா டக் அவுட் ஆனார். சிறிது நேரத்தில் ஸ்மிருதி மந்தனா பெவிலியனை அடைந்தார். இருவரும் சார்லி  டீனால் வெளியேறினர். பின் வந்த ஹர்மன்ப்ரீத் மற்றும் திப்தி ஷர்மாவும் அவுட் ஆகி ஏமாற்றினர்.

அதன்பின் வந்த ரிச்சா கோஷ், பூஜா, ஸ்ரேயங்கா பாட்டீல் (4), டைட்டாஸ் சாது (2), சாய்கா இஷாக் (8) ஆகியோரும் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் சென்றதால், டீம் இந்தியா சிறிய ஸ்கோருக்கு சுருண்டது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் எக்லெஸ்டோன், சார்லட் டீன், லாரன் பெல், சரக்லென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் நாட்செவர், ஃப்ரேயா கெம்ப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

அதேநேரத்தில் சொந்த மண்ணில் நடந்த கடைசி 3 டி20 தொடரில் இந்திய மகளிர் அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதன்படி தற்போது இங்கிலாந்திடம் 2-0* என்ற கணக்கில் தோற்றது. ஆஸ்திரேலியாவிடம் 4-1 என இந்திய மகளிர் அணி தோற்றது. தென்னாப்பிரிக்காவிடம் 2-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது. இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற  இந்திய அணி போராடும்.