காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி குறித்து தகவல் கொடுத்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா..

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், 2023 ஐசிசி உலகக் கோப்பையின் முடிவில் இருந்து, முகமது ஷமி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். மேலும், 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவின் 4 வது போட்டியின் போது ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். அதன் பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

இந்திய கிரிக்கெட் அணி டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 வடிவிலான தொடரில் விளையாடவுள்ளது. இந்திய தேர்வாளர்கள் ஹர்திக் பாண்டியாவை இந்தத் தொடரில் சேர்க்கவில்லை, அதே நேரத்தில் முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்ட பிறகு விளையாட வாய்ப்பு வழங்கப்படலாம். இந்திய அணியின் இந்த 2 முக்கிய வீரர்களின் காயம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிசிசிஐ செயலாளர் ஹர்திக் பாண்டியா நன்றாக குணமடைந்து வருவதாகவும், ஆப்கானிஸ்தான் தொடரில் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்றும் கூறினார். இந்திய அணி ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரில் ஹர்திக் பாண்டியா மீண்டும் களமிறங்கலாம் என்று கூறியுள்ளார். அதாவது, ஹர்திக் பாண்டியா ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு தகுதியானவராக இருக்கலாம் என்று ஜெய் ஷா கூறியதாக பிடிஐ [PTI] தெரிவித்துள்ளது. முகமது ஷமியின் காயம் குறித்த அப்டேட்டை அளித்த ஜெய் ஷா, தென்னாப்பிரிக்கா தொடரின் போது ஷமி உடல்தகுதியுடன் இருக்கலாம் என்று கூறினார். 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் ஒரு மாத சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், இறுதியாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முகமது ஷமி பந்துவீச முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில், ஹர்திக் பாண்டியா இல்லாததால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில்  இன்று டர்பனில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றிபெற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டீம் இந்தியா  ஆயத்தமாகி வருகிறது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் தொடர் எப்போது?

 ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி ஜனவரி 2024 தொடக்கத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் என்பதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்துகிறது. மூன்று டி20ஐ போட்டிகள் ஜனவரி 11, 14 மற்றும் 17 ஆம் தேதிகளில் அமைக்கப்பட்டுள்ளன” என்று ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

3 டி20ஐ போட்டிகளில் முதல் போட்டி ஜனவரி 11 ஆம் தேதி மொஹாலியில் திட்டமிடப்பட்டுள்ளது, 2வது மற்றும் 3வது போட்டிகள் முறையே ஜனவரி 14 மற்றும் 17 ஆம் தேதி இந்தூரில் மற்றும் பெங்களூருவில் நடைபெறும். ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் பல ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிகழ்வுகளில் சந்தித்திருந்தாலும், பல போட்டிகள் கொண்ட ஒயிட்-பால் தொடரில் அவர்கள் சந்திப்பது இதுவே முதல் முறை.

இரு அணிகளும் 5 டி20 போட்டிகளில் சந்தித்துள்ளன, அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் சமீபத்தில் ஐசிசி ஆடவர் 2023 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு பயணம் செய்தது, அங்கு இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகியவற்றுக்கு எதிரான வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.