11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா-பாகிஸ்தான் அகமதாபாத்தில் மோதிய நிலையில், அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நாளை சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. குஜராத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல்முறையாகும். 28 டிசம்பர் 2012 அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே டி20 போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. யுவராஜ் சிங்கின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் சிறப்பம்சங்களை கீழே பாருங்கள்

ரோஹித் சர்மா 7வது இடத்தில் பேட்டிங்செய்தார் :

ரோஹித் சர்மா இன்று டீம் இந்தியாவின் கேப்டனாக உள்ளார் மற்றும் இன்னிங்ஸை தொடங்கும் வீரராக உள்ளார். ஆனால் அந்த போட்டியில் ரோஹித் பேட்டிங் வரிசையில் 7வது இடத்தில் வந்தார். அவர் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒரு பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. கவுதம் கம்பீர் மற்றும் அஜிங்க்யா ரஹானே 4.5 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்தனர். தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. ரஹானே 28 ரன்களும், விராட் கோலி 27 ரன்களும், யுவராஜ் சிங் அதிரடியாக 72 ரன்களும், மகேந்திர சிங் தோனி 33 ரன்களும் எடுத்தனர்.

அகமதாபாத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது :

அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 26 பந்துகளில் 55 ரன்களும், நசீர் ஜாம்ஷெட் 41 ரன்களும் எடுத்தனர்.. இதனால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அசோக் திண்டா அதிகபட்சமாக 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அபாரமான இன்னிங்ஸ் (72 ரன், 36 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) யுவராஜ் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். எனவே அகமதாபாத்தில் மீண்டும் இந்திய அணி வெற்றி பெற விரும்பும். 

அதே நேரத்தில் ஒருநாள் உலக கோப்பையில்   பாகிஸ்தான் – இந்தியா 7 முறை மோதியது. இதில் பாகிஸ்தான் ஒருமுறை கூட வெல்லவில்லை. 7 போட்டியிலும் இந்தியாவே வென்றது. இந்த வரலாற்றை அப்படியே தக்கவைக்க இந்தியா விரும்பும். அதே சமயம் பாகிஸ்தான் முதல்முறையாக உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி சரித்திரத்தை மாற்ற முயற்சிக்கும்.

உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் தங்களது முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவாக உள்ளது. 2021 முதல் அகமதாபாத்தில் உள்ள மோட்டெரா சர்தார் படேல் ஸ்டேடியத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.