இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே மைதானத்தில் அனல் பறக்கும். ஆனால், தற்போது ஆட்டத்தையும் தாண்டி, இரு நாட்டு வீரர்களுக்கும் இடையிலான ‘ஹேண்ட்ஷேக்’ (கை குலுக்குதல்) விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளை (பிப்ரவரி 15) கொழும்பில் நடைபெறவுள்ள பலப்பரீட்சைக்கு முன்னதாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா அளித்த பேட்டி இந்த விவாதத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த 2025 ஆசியக் கோப்பையின் போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாம் என்று இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நடைமுறை சீனியர் அணிகளுடன் நின்றுவிடாமல், 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) ஆசியக் கோப்பை மற்றும் 2026 உலகக் கோப்பையிலும் தொடர்ந்தது. இரு நாட்டு இளம் வீரர்களும் போட்டியின் முடிவில் கைகுலுக்கிக் கொள்வதைத் தவிர்த்தனர்.
நாளை நடைபெறவுள்ள மகா யுத்தத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம், “நாளை இந்திய வீரர்களுடன் கைகுலுக்குவீர்களா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்:
“அது உங்களுக்கு நாளைக்கே தெரிந்துவிடும்” என்று சுருக்கமாகக் கூறினார்.
அவரது இந்த மர்மமான பதில், நாளை இந்திய – பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க வாய்ப்பில்லை என்பதையே சூசகமாக உணர்த்துவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.
முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் விளையாட பாகிஸ்தான் முதலில் மறுப்பு தெரிவித்தது. வங்கதேசத்திற்கு ஆதரவாக இந்தியாவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இருப்பினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசு தனது அணி விளையாட அனுமதி அளித்தது. இவ்வளவு கசப்பான சூழலுக்கு மத்தியில் வீரர்கள் கைகுலுக்கி கொள்வது கடினம் என்றே தெரிகிறது.
அரசியல் பதற்றங்களுக்கு இடையே ஒரு வீரராக உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது, “விளையாட்டு எப்போதும் சுமூகமான சூழலில் விளையாடப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. ஆரம்பத்திலிருந்தே கிரிக்கெட் எத்தகைய மாண்புடன் விளையாடப்பட்டதோ, அதே முறையில் தொடர வேண்டும்” என்று ஆகா குறிப்பிட்டார்.
