ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20ஐ தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று  கோப்பையை கைப்பற்றியது டீம் இந்தியா.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற 5வது டி20 போட்டியில் அர்ஷ் தீப் சிங்கின் அபார பந்துவீச்சால் இந்தியா வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்துவீசிய அர்ஷ் தீப் சிங் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. பென் மெக்டெமார்ட் (36 பந்துகளில் 54; 5 சிக்சர்) அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் மேத்யூ வேட் (15 பந்துகளில் 22 ரன்; 4 பவுண்டரி) கடைசி ஓவரில் அவுட்டானார். ஆஸி.யின் தோல்வி உறுதியானது. முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்சர் படேல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இலக்கை துரத்தும்போது ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழந்தது. முகேஷ் குமாரின் 3வது ஓவரில் பிலிப் (4) அவுட் ஆனார்.  டிராவிஸ் ஹெட் (18 பந்துகளில் 28 ரன்கள்) அதிரடியாக தொடங்கிய போதிலும் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. இந்த நிலையில் பென் மெக்டெர்மாட் ஒரு புறம் சிறப்பாக ஆடினார். பின் டிம் டேவிட் (17) பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை. ஆனால் இறுதியில் வேட் ஜொலித்தார். ஆஸி வெற்றி பெறும் என்று தோன்றியது. ஆனால் கடைசி ஓவரில் அர்ஷ் தீப் சிங் வேட் விக்கெட்டை வீழ்த்தி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

டாஸ் இழந்து பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் (37 பந்துகளில் 57; 5 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் அடித்து அசத்தினார். அக்சர் படேல் (20 பந்துகளில் 31; 2 பவுண்டரி, 1 சிக்சர்) அசத்தினார். ஜிதேஷ் சர்மா 16 பந்துகளில் 24 ரன்களும், ஜெய்ஸ்வால் 21 ரன்களும் எடுத்தனர். இவர்களை   தவிர மற்ற வீரர்கள் அதிக ரன்கள் எடுக்கவில்லை. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் துவர்ஷூயிஸ் மற்றும் ஜேசன் பெஹ்ரன்டோர்ப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.