தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்படாத நிலையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என கேள்வி எழுகிறது..

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி தனது புதிய தொடருக்கு தயாராகி வருகிறது.  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டீம் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து அனைவரின் பார்வையும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் மீது உள்ளது. இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்திற்கான 3 வடிவங்களுக்கான அணியை சில நாட்களுக்கு முன் அறிவித்துள்ளது. ஆனால் அதில் ஒரு வீரர் இடம் பெறாதது   விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் தான் புவனேஷ்வர் குமார். நீண்ட நாட்களாக இந்திய அணிக்கு வெளியே இருந்தவர், தற்போது சிறப்பான பார்மில் இருக்கிறார்.

33 வயதான புவனேஷ்வர் குமார் கடைசியாக டீம் இந்தியாவுக்காக நவம்பர் 2022 இல் விளையாடினார், ஆனால் தற்போது விஜய் ஹசாரே டிராபியில் விளையாடி வருகிறார். புவனேஷ்வர் குமார் விஜய் ஹசாரே டிராபியில் இதுவரை 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், எகானமி ரேட் 5க்கும் குறைவாக உள்ளது. இங்கும் அவர் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் சிறந்த பார்மில் உள்ளார். அதாவது தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் புவனேஷ்வர் குமார் கவனிக்கப்படாமல் இருந்தாலும், பழைய ஃபார்மில் இருக்கிறார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஆஷிஷ் நெஹ்ராவும் புவனேஷ்வர் குமாருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். புவி நல்ல ஃபார்மில் இருப்பதால், தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், குறைந்தபட்சம் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு புவி தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஆஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்.

புவியைப் பொறுத்தவரை, அவர் கடந்த ஒரு வருடமாக இந்திய அணியில் இல்லை, மேலும் சில மாதங்களுக்கு முன்பு காயமும் ஏற்பட்டது. ஆனால் டி20 வடிவத்தில் புதிய பந்து வீச்சாளர்கள்வருவதால், புவனேஷ்வர் குமாரின் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. முன்னதாக சொந்த நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலியா தொடரில் புவிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்காததால் தற்போது தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்திலும் புவிக்கு இடம் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பவர் பிளேயில் பந்தை நன்றாக ஸ்விங் செய்து விக்கெட் எடுக்கக்கூடிய புவனேஷ்வர் குமார் 33 வயதில் மீண்டும் களமிறங்குவது கடினமாகத் தான் தெரிகிறது.