குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை விடவும் சுவாசிக்கும் காற்றே நஞ்சாகி வரும் நிலையில் மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வணிக வளாகத்திற்குள் ஓடிப் பயிற்சி பெறும் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மும்பையின் காற்றுத் தரம் மிகவும் மோசமடைந்து மாசுக் குறியீடு 332 புள்ளிகளைத் தொட்டு அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதால் அங்குள்ள பூங்காக்களில் உடற்பயிற்சி செய்வது உடல்நலத்திற்குத் தீங்காகக் கருதப்படுகிறது. இதனால் அந்த வாலிபர் குளிர்சாதன வசதியுடன் கூடிய வணிக வளாகத்தின் நடைபாதைகளைத் தனது ஓட்டப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Bhavin Parmar (@bhavin_2203)

தூசி மற்றும் மாசற்ற சூழல் இருப்பதாலும் போக்குவரத்து இடையூறுகள் இல்லை என்பதாலும் இந்த வினோத முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். மும்பையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் மற்றும் மேம்பால கட்டுமானப் பணிகளால் காற்றில் தூசியின் அளவு அதிகரித்துள்ள நிலையில் இந்த வாலிபரின் மாற்றுச் சிந்தனையை இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ள சூழலில் இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.