இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்க குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் 600-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வருடத்திற்கு ஒருமுறை சுங்க கட்டணம் மாற்றி அமைக்கப்படும் நிலையில் நடப்பாண்டிலும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. அதன்படி 5 முதல் 10 சதவீதம் வரை சுங்க கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

இதனால் ஒரு காருக்கு 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி உயர்த்தப்பட இருக்கும் சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சுங்க கட்டணம் 10 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொதுமக்கள் பெட்ரோல், டீசல், சிலிண்டர் மற்றும் பால் விலை உயர்வு போன்றவைகளால் தவித்து வருகிறார்கள்‌. இது போன்ற சூழலில் சுங்க கட்டணங்களை உயர்த்தி மக்களை வதைப்பது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்.