ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வெளியிட்ட ஒரு கருத்து, நாட்டின் அரசியல் சூழலில் பெரும் விவாதத்திற்கே காரணமாகியுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற அவரது கூற்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவா என்பதை எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மோகன் பகவத், “ஒரு மனிதர் 75 வயதாகும்போது, அவருக்கு ஓய்வு வேண்டும். புதிய தலைமுறைக்கு வழி கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இது எதிர்க்கட்சியினரிடம் அரசியல் ஆயுதமாக மாறி உள்ளது. ஏனெனில், வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி நரேந்திர மோடிக்கு 75 வயதாகிறது என்பதைக் குறிப்பிட்டு, “இந்தச் செய்தி மோடிக்கு நேரடியான அறிவுறுத்தலா?” எனவும், “ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே அதிகாரப் போட்டி உண்டா?” எனவும் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

முன்னதாக, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை 75 வயது கடந்ததும், அவர்களை நீக்கினார்கள். அதே முறையை மோடி மீதும் பின்பற்றுவாரா என்பதுதான் தற்போது கேள்விக்குறி. இந்தப் பின்னணியில் தான், சிவசேனாவின் சஞ்சய் ராவத், “மோடி ஓய்வு பெற வேண்டுமென்றும், அதற்கான முதல் அத்தியாயம் நாக்பூர் பயணமாக இருக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதுபோல, “பாஜக அரசியலமைப்பில் 75 வயதிற்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்ற விதி இல்லை” என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஐந்தாண்டுகளுக்கு முன் இதே விஷயத்தை மோகன் பகவத் மறுத்திருந்தாலும், அரசியலில் 5 ஆண்டுகள் என்பது நீண்ட காலம் என்பதால், புதிய நிலைப்பாட்டில் ஆர்எஸ்எஸ் பேசுகிறதா என்பது தற்போதைய விவாதத்தின் மையமாகியுள்ளது.

எப்படி இருந்தாலும், மோடிக்கு 75 வயதாகும் நெருங்கிய காலத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் வெளியிட்ட இந்தக் கருத்து, பாஜகவுக்குள் தலைமை மாற்றத்துக்கு ஆன அறிகுறியாக இருக்கலாம் என அண்மைக்கால அரசியல் பார்வையாளர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். இது போல, பாஜகவின் இயக்கத்தை மேலிருந்து கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் ஆர்எஸ்எஸின் பேச்சு கருதப்படுகிறது.