வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொடர்ந்து, ஈரான் தனது அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபடாமல், புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) கடுமையான அறிவுரை வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு நடவடிக்கையில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்தச் சூழலில், ஈரானின் இந்த வன்முறை நடவடிக்கை ஒரு தவறான கணக்கீடு என்றும், இது ஈரானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தியுள்ளது என்றும் யுஏஇ அதிபரின் ராஜதந்திர ஆலோசகர் அன்வர் கர்காஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தங்களை தனிமைப்படுத்தும் வட்டம் மேலும் விரிவடைவதற்கு முன்பாக, ஈரான் அறிவுப்பூர்வமான பாதைக்குத் திரும்பி அண்டை நாடுகளுடன் பகுத்தறிவுடன் பழக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம், தங்களுக்கு நேர்ந்துள்ள தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தங்களுக்கு முழு உரிமை உள்ளதாகத் தெரிவித்துள்ள அமீரகம், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.