பேருந்தில் இடம் இல்லாமல் நின்ற இளைஞரை, பெண்மணி வம்புக்கு இழுத்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. டெல்லி அரசுப் பேருந்து ஒன்றில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நிற்கக்கூட இடமில்லாத அந்தப் பேருந்தில், நீல நிறச் சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் ஒரு இருக்கைக்கு அருகே அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

அந்த இருக்கையில் மஞ்சள் நிறச் சேலை அணிந்த பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். திடீரென அந்தப் பெண், அந்த இளைஞரைப் பார்த்து, “கையைத் தள்ளி வை.. ஏன் இடிக்கிறாய்?” என ஒருமையில் பேசத் தொடங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், “பேருந்தில் இடமே இல்லை.. என் கை உங்களிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று பாருங்கள். நான் எதையும் தவறாகச் செய்யவில்லை” எனத் தெளிவாகப் பதிலளித்தார்.

ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து “உங்களுக்கு வெட்கமே இல்லையா? பெண்களைத் தொல்லை செய்கிறீர்கள்” என ஒருதலைப்பட்சமாகக் குற்றம் சாட்டினார்.

இதனால் பொறுமையிழந்த அந்த இளைஞர், “ஆமாம் ஆண்டி.. இந்த ஆண் சமுதாயம் உங்களைப் போன்ற பெண்களைப் பார்த்தாலே இப்போது பயந்துதான் இருக்கிறது. ஏதாவது ஒரு பழியைச் சுமத்தி விடுவீர்களோ என்று பயமாக இருக்கிறது” என ‘நச்’ என்று பதிலடி கொடுத்தார்.

இந்த வீடியோ @gharkekalesh என்ற எக்ஸ் (X) பக்கத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அந்தப் பெண் வேண்டுமென்றே அந்த இளைஞரை அவமானப்படுத்தப் பார்க்கிறார்” என்றும், “இளைஞர் கொடுத்த பதில் நூறு சதவீதம் உண்மை” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.