பீட்சா சாப்பிட வந்த இடத்தில் ஜாதியைக் கேட்டு மிரட்டியதால், காதல் ஜோடி இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த விவகாரம் சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தின் காந்த் (Kant) காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பீட்சா கடை உள்ளது. சனிக்கிழமை மாலை அங்கு 21 வயது இளைஞரும், 19 வயது இளம் பெண்ணும் உணவுக்காகக் காத்திருந்தனர்.

அப்போது அங்கு நுழைந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த கும்பல், அந்த ஜோடியிடம் விசாரணை என்ற பெயரில் வம்பிழுக்கத் தொடங்கியது.

அவர்களது ஜாதியைக் கேட்டு மிரட்டிய அந்தக் கும்பல், அவர்களை வீடியோ எடுத்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த அச்சமடைந்த அந்த இளைஞர், கடையின் ஜன்னல் கம்பியைப் பிடுங்கிவிட்டு திடீரென இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

அவரைத் தொடர்ந்து அந்தப் பெண்ணும் கீழே குதித்தார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.