உயிரைக் காக்க வேண்டிய ஆம்புலன்ஸே, இரண்டு பிஞ்சு உயிர்களைப் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் – ரேவா நெடுஞ்சாலையில் நேற்று மாலை இந்த கோர விபத்து நடந்துள்ளது. கண்டி கிராமத்தைச் சேர்ந்த ரிங்கு படேல் (15) மற்றும் ஷோபித் படேல் (12) ஆகிய இரண்டு சிறுவர்கள், வீட்டுத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ், கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தின் தாக்கம் எவ்வளவு கொடூரமானது என்றால், 9-ம் வகுப்பு மாணவனான ரிங்கு, ஆம்புலன்ஸின் முன்பகுதியில் சிக்கி சுமார் 40 மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

மற்றொரு சிறுவன் ஷோபித் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்ப முயன்ற ஆம்புலன்ஸ் டிரைவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவருக்குத் தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைத்தனர். டிரைவர் போதையில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.