மலையாளத் திரை உலகில் பிரேமம் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. தமிழகத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் 200 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இதில் நடிகை சாய் பல்லவி “மலர் டீச்சர்” என்ற கதாபாத்திரம் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அதன் பின் தமிழ் திரையுலகில் நடிக்க அதிக வாய்ப்புகள் சாய் பல்லவிக்கு கிடைத்தது. சமீபத்தில் வெளியான “அமரன்” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து உள்ளது. இந்த நிலையில் நடிகை சாய்பல்லவி இந்தியில் “ராமாயணா ” புராணக் கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் சீதையாக நடிகை சாய் பல்லவி, ராமராக ரன்பீர் கபூர், ராவணனாக நடிகர் யாஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்று பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இந்தப் பதிவில் நடிகை சாய் பல்லவி இந்தி திரைப்படத்தில் “ராமாயணா” புராண கதையில் நடிக்க உள்ளதால் படம் முடியும் வரை அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை என உறுதி எடுத்துள்ளார். இதனால் எந்த அசைவ ஹோட்டலுக்கும் சாப்பிட செல்வதில்லை. வெளியூர்களுக்கு படப்பிடிப்பு வேலைக்காக செல்லும்போதும் கூடவே சமையல்காரர்களையும் அழைத்துச் செல்கிறார். என தவறான தகவல்களை பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து நடிகை சாய் பல்லவி தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவில்,”நான் எப்பொழுதும் வதந்திகளை கண்டு கொள்வதில்லை.

ஆனால் தவறான வதந்திகள் குறித்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனது படம் வெளியாகும் போதும் அதன் அறிவிப்பு வெளியாகும் போதும் ஒவ்வொரு முறையும் இது மாதிரி தவறான வதந்திகள் பரப்பப்படுகிறது. ஒரு மிகப்பெரிய தனியார் ஊடகம் அல்லது சமூக ஊடகப் பக்கங்களில் இது போன்ற தவறான செய்திகளை பரப்பினால் அடுத்த முறை எனது தரப்பில் இருந்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த பதிவில் நடிகை சாய் பல்லவி தெரிவித்து இருந்தார்.