தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு கடை நடத்தி வரும் முத்துக்குமார் என்பவர், தனது கடையில் வேலை பார்த்த 25 வயது இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26-ம் தேதி மதியம், கடையில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட முத்துக்குமார், அங்கிருந்த தனி அறைக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகச் சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். ஆட்கள் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்துக்குமார், “இதை வெளியில் சொன்னால் உன்னைக் கொலை செய்துவிடுவேன்” என அந்தப் பெண்ணிற்கு மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முத்துக்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
