பெங்களூருவில் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் பயணம் செய்த 22 வயது இளைஞர் மற்றும் அவரது தோழிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் இப்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த இளைஞர் தனது தோழியுடன் வசதியாகப் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக மொத்தம் 3 சிலீப்பர் சீட்களை முன்பதிவு செய்துள்ளார்.

பயணத்தின் போது இருவரும் ஒரே சீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் இருந்ததைக் கவனித்த பேருந்து கண்டக்டர், திடீரென அவர்களிடம் வந்து தனித்தனியாக அமருமாறு மிரட்டியுள்ளார். அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, “உங்க அப்பா அம்மாவுக்கு போன் பண்ணுவேன்”, “போலீஸைக் கூப்பிடுவேன்” என ஒருமையில் பேசி மிரட்டியதுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

எதற்கடா வம்பு என்று அந்த இளைஞர்கள் பயந்து போய் தனித்தனி சீட்டிற்கு மாறினாலும், முறையாகப் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்த பிறகும் தங்களுக்கு நேர்ந்த இந்த ‘மாரல் போலிசிங்’ கொடுமை குறித்து அந்த இளைஞர் ரெடிட் (Reddit) பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த பலரும், “பணம் கொடுத்து சீட் வாங்கிய பிறகு கண்டக்டருக்கு இதில் தலையிட அதிகாரம் இல்லை” என்றும், “காலி சீட்டை மற்றவர்களுக்கு விற்று காசு பார்ப்பதற்காகவே கண்டக்டர் இப்படிச் செய்திருக்கலாம்” என்றும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.