மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 50 வயது தோட்டக்காரர், பணிச்சுமை மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, பல்கலைக்கழக நூலகக் கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ததிப்பூர் பகுதியைச் சேர்ந்த அங்கத் ஜாதவ் என்ற அந்த நபர், கடந்த பல ஆண்டுகளாக அங்கு தோட்டக்காரராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவர் நூலகத்திலிருந்து மொழி ஆய்வுத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால், அவர் புதிய இடத்தில் பணியில் சேரச் சென்றபோது, கடந்த 19 நாட்களாக அவருக்கு ‘ஜாய்னிங்’ கொடுக்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த அங்கத், நேற்று தனது மனைவியிடம் போனில் பேசிவிட்டு, திடீரென நூலகக் கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட மாணவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அப்போது வழியிலேயே, “எனக்குச் சிகிச்சை வேண்டாம், நான் சாக வேண்டும்” என்று அவர் கதறியது அங்கிருந்தவர்களைக் கண் கலங்க வைத்தது.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு ஏழைத் தொழிலாளியின் மரணம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
