இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உறவுகளுக்கு இடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது பெருநகரங்களில் ‘எம்ப்டி நெஸ்ட் டிவோர்ஸ்’ (Empty Nest Divorce) எனப்படும் விவாகரத்து முறை அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது வீட்டில் உள்ள பறவைக்குஞ்சுகள் சிறகு முளைத்து பறந்து சென்ற பிறகு, கூடு எப்படி தனிமையாகி விடுமோ, அதைப்போலவே பிள்ளைகள் வளர்ந்து உயர்கல்விக்காகவோ அல்லது வேலைக்காகவோ வீட்டை விட்டு வெளியேறும்போது, வீட்டில் இருக்கும் கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரிவை இது குறிக்கிறது. பல ஆண்டுகளாக பிள்ளைகளுக்காகவும், குடும்பப் பொறுப்புகளுக்காகவும் மட்டுமே வாழ்ந்த தம்பதிகள், பிள்ளைகள் சென்ற பிறகு ஒருவருக்கொருவர் அந்நியமாக உணர்வதே இதன் அடிப்படை.
பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போது அவர்களின் படிப்பு, ஆரோக்கியம், வேலை மற்றும் திருமணம் என பெற்றோரின் மொத்த கவனமும் அவர்கள் மீதே இருக்கிறது. இந்த ஓட்டத்தில் கணவன் – மனைவி தங்களுக்குள் பேசிக்கொள்வதையும், அன்பைப் பகிர்ந்து கொள்வதையும் மறந்து விடுகின்றனர்.
பிள்ளைகள் வீட்டில் இருக்கும் வரை அவர்களின் தேவைக்காக ஒன்றாக வாழும் தம்பதிகள், அவர்கள் வெளியேறியவுடன் தங்களுக்குள் பேசிக்கொள்ள எதுவுமே இல்லை என்பதை உணர்கின்றனர். இந்த இடைவெளிதான் இறுதியில் விவாகரத்தில் முடிகிறது.
நிபுணர்களின் கருத்துப்படி, இதற்கு முக்கிய காரணங்களாக சில விஷயங்கள் கூறப்படுகிறது. அதன் படி பல ஆண்டுகள் ‘அப்பா – அம்மா’ என்ற கதாபாத்திரத்தில் மட்டுமே வாழ்ந்தவர்கள், ‘கணவன் – மனைவி’ என்ற உறவை மறந்து விடுகின்றனர்.
இன்றைய காலத்தில் தியாகம் செய்து கஷ்டப்பட்டு வாழ்வதை விட, தங்களுக்குப் பிடிக்காத உறவிலிருந்து வெளியேறி, மீதமுள்ள காலத்தை நிம்மதியாக கழிக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் காரணமாக, தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பிள்ளைகள் சென்ற பிறகு ஏற்படும் இந்த தனிமையை தம்பதிகள் சரியாகக் கையாண்டால் பிரிவைத் தவிர்க்கலாம் என உளவியலாளர்கள் கூறுகின்றனர். பிள்ளைகள் இல்லாத நேரத்தில் மீண்டும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒன்றாகப் பயணம் செய்யவும் பழக வேண்டும். மனதில் தேக்கி வைத்திருக்கும் குறைகளை வெளிப்படையாகப் பேசித் தீர்க்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் அதிகமானால் தயக்கமின்றி குடும்ப நல ஆலோசகர்களை அணுகுவது சிறந்தது.
மேலும் பொறுப்புகள் முடிந்த பிறகு வரும் இந்தத் தனிமை, ஒரு புதிய தொடக்கமாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு பிரிவின் முடிவாக இருக்கக் கூடாது என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
