மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வெளியே நடந்த ஒரு கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த நிர்வாகத்தையுமே உலுக்கியுள்ளது. வழக்கம்போல நோயாளிகளும் உறவினர்களும் அந்த மருத்துவமனையில் நடமாடிக்கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு ‘மனித உறுப்பை’ வாயில் கவ்விக்கொண்டு அங்குமிங்கும் ஓடியுள்ளது.
இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியதுடன், சிலர் அந்த நாய் கவ்விச் சென்ற காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீ போல பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு மருத்துவமனை வளாகத்திலேயே இப்படி ஒரு அவலம் நடந்திருப்பது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அந்த மனித உறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு நோயாளிக்குச் சொந்தமானதா அல்லது உயிரிழந்த ஒருவரின் சடலத்திலிருந்து நாய் எடுத்து வந்ததா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆஸ்பத்திரி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் அவசர அவசரமாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், மருத்துவமனையின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
