மத்தியப் பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கணிதப் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. தார் மாவட்டம் பீதம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி தேர்வு மையத்திற்கு 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார்.
தேர்வு தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம் தீவிரமாகப் பேப்பர் எழுதிக்கொண்டிருந்த அந்த மாணவிக்கு, திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களிடம் அனுமதி பெற்றுவிட்டு கழிவறைக்குச் சென்ற அந்த மாணவி, நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது கழிவறையிலேயே அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்து கிடப்பதைக் கண்டு ஆசிரியர்கள் அப்படியே உறைந்து போயினர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தாயும் சேயும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது இருவரும் நலமாக இருப்பதாகவும், மாணவியின் குடும்பத்தினருக்குக் கூட அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவியின் கர்ப்பத்திற்குக் காரணமான நபர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
