கோவாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மொராக்கோவைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், வணிக விசாவில் இந்தியா வந்து, திவார் தீவில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பயிற்சியில் கலந்து கொண்டார்.
பயிற்சியின் போது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், பழைய கோவாவில் உள்ள ஹெல்த்வே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெறும் நிலையில், அவர் ஐசியுவில் இருந்தபோது, 28 வயது மருத்துவர் விருஷப் தோஷி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, பரிசோதனைக்காக மருத்துவர் முதலில் ஒரு செவிலியருடன் வந்தார். ஆனால் பின்னர் அந்த செவிலியரை வெளியே அனுப்பிவிட்டு, தன்னிடம் கொடூரமாக நடந்துகொண்டார் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் கோவாவிலிருந்து தப்பிச் சென்று மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் ஒளிந்துகொண்டார். அங்கிருந்து அவரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் சிசிடிவி மற்றும் விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹெல்த்வே மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு, சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான அனைத்து மருத்துவ மற்றும் சட்ட உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
