மும்பையில் நேற்று காலை நடந்த பயங்கர விபத்தில், சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் மோதியதால் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம், மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள எல்.பி.எஸ். மார்க் சாலையில் காலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
சொகுசு கார் ஒன்றை பெண் ஒருவர் ஓட்டிச் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பு சுவரைத் தாண்டி நடைபாதைக்கு நுழைந்து, அங்கு இருந்த ஒரு கடையில் மோதியது. இதனால், நடைபாதையில் சென்ற நால்வர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
விபத்துக்குப்பின் காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. கார் ஓட்டிய பெண் மற்றும் அவரது தோழியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு, உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விசாரணையில் கார் ஓட்டிய பெண் பாவிகா தாமா (வயது 30) என்றும், அவரது தோழி கோரம் பானுசாலி (30) என்றும் தெரியவந்தது. மருத்துவ பரிசோதனையில் இருவரும் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர்கள் பயணித்த காரில் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர்களுடன் காரில் இருந்த மற்றொரு வாலிபரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்துக்குப் பிறகு அவர் தப்பிச் சென்ற நிலையில், தற்போது போலீசார் அவரை தேடி வருகின்றனர். இவர்கள் அசல்பா பகுதியில் கோரம் பானுசாலியை இறக்கிவிட்டு செல்லும் வழியில் இந்த விபத்து நடந்ததாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாவிகா தாமா மற்றும் அவரது தோழியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுபோதையில் கார் ஓட்டி, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
