விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் போது சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது.

சட்டவிரோதமாக விளம்பர பலகைகள்,  பேனர்கள் மற்றும் கட் அவுட்களை வைப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். டிராபிக் ராமசாமி மரணத்திற்கு பிறகு,  ”அரவிந்த்” என்பவர் இந்த வழக்கை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. கடந்த ஆண்டு அமைச்சர் ”பொன்முடி”யை வரவேற்று  கொடி கம்பம்  நட்டிய போது 13 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  தலைமை நீதிபதி அமர்வு கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில்,  சட்ட விரோதமாக விளம்பர பல வகைகள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றும்,  பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,  விதிமுறைகளில் விதிமீறல் ஏற்படுவதற்கு முன்பாக அதை தடுக்க வேண்டும்.  விபத்து ஏதும் நடந்த பிறகு அதற்கு விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட,  சட்ட விரோத பேனர்கள் வைப்பதையும்,  விளம்பர பலகைகள் வைப்பதையும் தடுப்பது முக்கியமானது என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

சட்டவிரோத விளம்பரப் பலகைகளை வைப்பதை தடுப்பதற்கு மாநில அரசு உள்ளாட்சி அமைப்பு எந்த மாதிரியான நடைமுறைகள் பின்பற்றுகின்றன என்பது தொடர்பான விரிவான அறிக்கையை நவம்பர் 7ஆம் தேதி தாக்கல் செய்வதற்கு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். விளம்பர பலகையை வைக்க அனுமதி வழங்கும்போது உரிய சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும்,  உள்ளாட்சி அமைப்புகள் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.