உத்திர பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாய தலைவர் ஜக்சித் சிங் நவம்பர் 26 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். உண்ணாவிரதப் போராட்டம் 17வது நாளை கடந்துள்ள நிலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறியதாவது, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்க வேண்டும்.
இல்லை எனில் என்னுடைய உண்ணாவிரத போராட்டம் நீடிக்கும். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நான் மரணமடைந்தால் அதற்கு முழு பொறுப்பும் மத்திய அரசுதான். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரசால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். என்று எழுதி இருந்தார். ஜக்சித் சிங் நடத்தும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக கலிபோர்னியாவில் வசிக்கும் இந்தியர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை கடைபிடிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, விவசாய மக்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெறுதல், லக்கிம் பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி ஆகிய கோரிக்கைகள் அடங்கும்.