இணையத்தில் ஆபத்தான உறவுகள் எவ்வாறு பண இழப்புகளாக மாறுகின்றன என்பதற்கான புதிய உதாரணம் தற்போது வெளிவந்துள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு பெண்ணை சந்தித்ததிலிருந்து தொடங்கிய சம்பவம், சைபர் மோசடியாக முடிந்தது.

சிறுவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கமானது. வீடியோக்கள், செய்திகள் ஆகியவை பரிமாறப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண், “I love you” என குறுஞ்செய்தி அனுப்பினார். அதற்கு பதிலாக, சிறுவன் “I love you too” என பதிலளித்ததாக தெரிகிறது.

அடுத்த நாளே, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுவனின் கைபேசிக்கு அழைத்துள்ளார். “நீங்கள் சொன்ன அந்தப் பெண் ஒரு திருமணமான பெண். இதைத் தெரிந்தவுடன் அவர் கணவர் எனக்கு போன் செய்தார். இப்போது நாங்கள்  போலீஸ் நிலையத்தில் இருக்கிறோம். உடனே வந்து சந்தியுங்கள்” என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சிக்கும் பயத்திற்கும் உள்ளான சிறுவன், “என்ன சொன்னாலும் செய்வேன்” என பதிலளித்துள்ளார். இதைப் பயன்படுத்திய அந்த நபர், ஆன்லைன் மூலம் ரூ.11,000 தொகையை பறித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சைபர் குற்றவாளிகள், கடந்த காலங்களில் போலி போலீஸ், எண்கவுன்ட் ஆபிசர், டிஜிட்டல் கைது என மிரட்டும் வழிமுறைகளை பயன்படுத்தி இருந்தனர். தற்போது, சொந்த தவறுகளுக்குப் பயமுறுத்தி பணம் பறிக்கும் புதிய சதி முறையை கையாளத் தொடங்கியுள்ளனர்.

இக்குற்றவியல் சம்பவம், இணையத்தில்  தெரியாத உறவுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதைக் வலியுறுத்துகிறது. மேலும் சிறுவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க உணர்வுப் பொறுப்புடன் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கையிட்டு வருகின்றனர்.