உத்தரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியில் (Intensive Voter List Revision) ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் மத்தியில், பணிச்சுமை (Work Pressure) காரணமாகத் தற்கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO – Booth Level Officer) ஒருவர், பணிச்சுமையால் விரக்தியடைந்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வேஷ் சிங் என்ற பெயருடைய அந்த ஆசிரியர், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டு வந்தார். பணிச்சுமை காரணமாக விரக்தியடைந்த அவர், நேற்று (நவம்பர் 30) தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சர்வேஷ் சிங் தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், பகல் மற்றும் இரவு முழுவதும் கடுமையாகப் பணியாற்றிய போதும், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியை உரிய காலக்கெடுவுக்குள் (Deadline) முடிக்க முடியவில்லை என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.