திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய நிலையில் எதிர்பாராத விதமாக பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்தனர்.

கிட்டதட்ட 8 அடி ஆழம் கொண்ட அந்த பள்ளத்தாக்கில் விழுந்த தம்பதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மகள் தீட்சனாவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நீண்ட நேரமாக வலியில் அலறி துடித்த அவரது சத்தத்தை கேட்டு அவ்வழியாக சென்ற மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . இதைத்தொடர்ந்து பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் என்று குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் கட்டுமான பணி செய்து வரும் ஒப்பந்ததாரர், பொறியாளர், மேற்பார்வையாளர் ஆகியோர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.