
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள சார்மடி மலைப்பாதையில் காட்டு யானைகள் சுற்றி திரிவது வழக்கம். அந்த வகையில் சில யானைகள் மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து செல்ல விடாமல் பயமுறுத்தும்.
இந்நிலையில் நேற்று காட்டு யானை ஒன்று சார்மடி மலைப்பாதை அருகே உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதியில் நின்று கொண்டிருந்தது. அந்த யானை அங்கிருந்த மரத்தில் உள்ள இலைகளை தனது தும்பிக்கையால் பறித்து சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில் அவ்வழியே வந்த சிலர் காரில் இருந்து இறங்கி மொபைல் போனில் அந்த யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அதோடு வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்த அவர்கள் யானையை கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த யானை அவர்களை நோக்கி வந்த நிலையில் துரத்த ஆரம்பித்தது.
இதனால் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் பயந்து உடனடியாக தங்களது கார்களில் ஏறினர். மேலும் மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த மக்களை யானை திடீரென துரத்திய சம்பவம் இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.