இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் குலு மாவட்டம் சைஞ்ச் பகுதியில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாலம் இல்லாததால் பாயும் ஆற்றை கடக்கும்போது எடுத்த  வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

வீடியோவில், சிறுவர்கள் மரத்தின் மீது நடந்து சென்று ஆற்றைக் கடக்கும் அதிர்ச்சியான காட்சி இடம்பெற்றிருந்தது. இது பொதுமக்கள் மற்றும் சமூக வலைதள பயனர்களிடையே அதிர்வை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவைக் கண்ட பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத், அதற்காக உடனடியாக பதிலளித்துள்ளார். “எனது குழு கோட்ட வன அலுவலரை தொடர்பு கொண்டது. இது தேசிய பூங்கா எல்லைக்குள் வருவதால் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வானிலை சீராகி வந்துவிட்டது. எனவே, 3-4 நாட்களில் பாலப்பணிகள் மீண்டும் தொடங்கும்” என்றும், “இந்த வீடியோ உள்ளூர்வாசிகளின் துயரத்தைப் பிரதிபலிக்கிறது. இருப்பினும், இதே இடத்திற்கு தீர்த்த்பானி வழியாக மாற்றுச் சாலையும் உள்ளது” என்று  கங்கனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கங்கனாவின் பதில் பல சமூக ஊடக பயனர்களிடம் வரவேற்பைப் பெற்றது. “உடனடியாக கவனம் செலுத்தியதற்கு நன்றி”, “மக்கள் பாதுகாப்பில் நம்பிக்கையை வளர்த்தீர்கள்”, “மாற்று சாலை கிடைத்தாலும், பாலம் கட்டும் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும்” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்குச் செல்லும் வகையில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் பலராலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.