சத்ரபதி ராணுவக் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு ஆங்கிலப் பள்ளியில், முன்னாள் மாணவன் ஒருவன் தனது ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் விஷால் துசிங் என்பவரைக் கத்தியால் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பில் தேர்வில் தோல்வியடைந்த அந்த மாணவன், வேறு இடத்தில் வேலை கிடைத்ததால் தனது மாற்றுச் சான்றிதழைப் பெறுவதற்காகத் தலைமையாசிரியர் அலுவலகத்திற்கு வந்துள்ளான்.

அப்போது, தனக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்கும் நோக்கில், ஆன்லைனில் ஆர்டர் செய்து மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியால் ஆசிரியர் விஷால் துசிங்கைத் தாக்கியுள்ளான்; தடுக்க வந்தவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த மாணவனின் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர், சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கத்தியைப் பறிமுதல் செய்து அந்தச் சிறுவனைத் தங்களது காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.