கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார் . இவர் ராதம்மாவிடம் சென்று உங்கள் வீட்டில் தங்கப் புதையல் இருக்கிறது என்று பேசி அதை எடுத்தால் நீங்கள் செல்வந்தர் ஆகலாம் என்று ஆசை காட்டியுள்ளார்.

அவரது வார்த்தையை நம்பிய தம்பதியினர் வீட்டில் உள்ள புதையலை எடுக்க ஒப்புக்கொண்ட நிலையில் லட்சுமி காந்த் ஒரு கும்பலை குள்ளப்பாவின் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்கள் இரவு நேரத்தில் வீட்டில் உள்ள அறையில் குழி தோண்ட ஆரம்பித்தனர். அப்போது குழியில் இருந்து எடுக்கப்பட்டதாக 2 தங்க காசுகளை தம்பதியிடம் காண்பித்து அவர்களை நம்ப வைத்தனர். இதைத்தொடர்ந்து இன்னும் பெரிய தங்கப் புதையல் உங்கள் வீட்டில் இருக்கிறது. அதை எடுக்க வேண்டும் என்றால் 8 லட்சம் பணம் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதன்படி தம்பதிகள் பணத்தை கொடுக்க மற்றொரு பானையை தம்பதியிடம் கொடுத்து இதற்கு தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். ஒருவேளை பூஜை செய்து முடிவதற்குள் பானையை திறந்தால் ரத்த வாந்தி எடுத்து சாவீர்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். அந்த தம்பதிகள் பானைக்கு பூஜை செய்து வந்த நிலையில் சில நாட்கள் கழித்து லட்சுமி காந்த் தம்பதியிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ராதம்மாவின் மகன் பானையை திறந்து பார்த்தபோது பானையில் ஒன்றும் இல்லாததை கண்டு அதிர்ச்சடைந்தார்.

பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமி காந்த் மற்றும் அவர்கள் உதவியாக இருந்த கும்பலை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.