தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். தற்போது கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாகவும், மோகன்-கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் ‘புரோ கோட்’ படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கவும் உள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் விவகாரமாக ரவி மோகன் – ஆர்த்தி ரவி விவாகரத்து உள்ளது. இதில் பாடகி கெனிஷாவுடனான நெருக்கம் முக்கிய காரணமாகப் பேசப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகனும் கெனிஷாவும் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ரவி மோகன் தற்போது ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை சென்னையில் துவக்கியுள்ளார். இதன் அறிமுக விழாவில் கெனிஷா, நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவுக்கு முன், தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றிக்காக ரவி மோகனும் கெனிஷாவும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பேசிய ரவி மோகன், “இந்த நிகழ்வு நடந்ததற்கு கெனிஷாதான் காரணம். என்னை உணர வைத்தவர் கெனிஷா; இவர் கடவுள் கொடுத்த வரம். இவரைப் போன்ற ஒருவர் எல்லோர் வாழ்விலும் இருக்க வேண்டும்,” என உருக்கமாகக் கூறினார். கெனிஷா இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.