கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு செய்த வாலிபருக்கு உதவிய நண்பர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரளசேரி பகுதியைச் சேர்ந்த முகமது சகத் (27) என்பவர், கடந்த 27-ம் தேதி கேரள அரசு பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி.) எழுத்துத் தேர்வை பையாரம்பலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் எழுதினார்.

அப்போது, தனது சட்டையில் மறைத்து வைத்த கேமரா மூலம் வினாத்தாளின் கேள்விகளை படம்பிடித்து, தேர்வு மையத்துக்கு வெளியே நின்ற நண்பருக்கு அனுப்பி, ஹெட்போன் வழியாக விடைகளைப் பெற்று முறைகேடாக தேர்வு எழுதியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கண்ணூர் காவல்துறையினர் முகமது சகத்தை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த நண்பரைத் தேடி வந்தனர்.

விசாரணையில், அவர் முண்டல்லூர் பகுதியைச் சேர்ந்த சபீல் (24) என்பவர் என்பதும், தேர்வு மையத்துக்கு வெளியே நின்று கேமரா மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைகளைத் தெரிவித்து முறைகேட்டுக்கு உதவியதும் உறுதியானது.

இதனையடுத்து, காவல்துறையினர் சபீலை கைது செய்தனர். இந்த சம்பவம் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளின் அவசியத்தை உணர்த்தியுள்ளது.