மக்கள் தொகையை குறைக்க ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் மக்கள் தொகையைப் பெருக்க சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ள புதுமையான உத்தரவு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவலின் படி சிக்கிம் மாநிலத்தின் மொத்த ஜனத்தொகை வெறும் 6 லட்சத்து 11 ஆயிரம் தான். இந்தியாவிலேயே மிகக் குறைந்த மக்கள் தொகையை கொண்ட சிக்கிம் மாநிலத்தின் குழந்தை பிறப்பு சதவீதம் தற்போது குறைந்து வருகின்றது.
இதனால் கவலை அடைந்துள்ள மாநில அரசே அரசு ஊழியர்களுக்கு புதுமையான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் ஒரு ஊதிய உயர்வும் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பல நிதி உதவிகளையும் அறிவித்துள்ளது. குழந்தைகள் பிறக்காத பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியும் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே முதல் குழந்தை பெற்ற பெண் அரசு ஊழியருக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறையும் குழந்தையின் தந்தைக்கு 30 நாட்கள் விடுமுறையும் அளித்து முன்னுதாரணமாக விளங்குகின்றது சிக்கிம் மாநிலம். நான்கே நான்கு மாவட்டங்களை கொண்ட இந்த சின்னஞ்சிறிய மாநிலத்தில் மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்து சுமார் 73 ஆயிரத்து 411 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.